Wednesday 21 October 2015

Can indian resident family members of an NRI pay out loan taken in India?

சத்யநாராயணன் ஈரோட்டைச் சேர்ந்த சிறந்த வக்கீல் குடும்பத்தில் பிறந்தவர். வாழையடி வாழையாய் வக்கீல் தொழில் செய்யும் வீட்டு பெரியவர்களை பார்த்து வளர்ந்ததால் சிறு வயது முதலே கருப்புக் கோட்டின் மீது மோகம் கொண்டார். படிப்பில் படு கெட்டியாக இருந்தவர் தன் வீட்டு வரவேற்பு அறையின் சுவர் முழுவதும் சான்றிதழும், மடல்களுமாக அடுக்கி வைத்திருந்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் LSATல் நல்ல மதிப்பெண் பெற்று மேற்படிப்புக்காக காலிபோனியாவில் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். குடும்பத்தில் அனைவருக்கும் சந்தோஷம் மடை கடந்தோடியது. ஸ்டான்போர்டின் பிரம்மாண்டமும் அங்கு படிக்க வரும் மாணவர்களின் சூட்டிப்பும் சத்யாவை மலைக்க வைத்தது. எப்படியாவது நன்கு படித்து தேர்ந்து விட வேண்டும் என்ற முனைப்போடு படித்துத் தேர்ச்சி பெற்றார். 
இந்தியா திரும்ப வந்த அவர் குடும்ப நண்பர் மூலம் வக்கீல் ஒருவரை சந்திக்க நேர்ந்த்து. நாளடைவில் அவர் ஒரு சிறந்த நண்பரானார். சத்யாவுடைய  வழிகாட்டியாகவும் நலம் விரும்பியாகவும் இருந்த அவர், படிப்பை இதோடு நிறுத்திவிடாமல் மேலும் படி, ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் மேலும் மூன்று வருடம் படித்தால் அமெரிக்காவின் தலை சிறந்த சட்ட நிறுவனங்களில் சுலபமாக வேலை கிடைக்கும். வாழ்க்கை தரமே வேறு நிலைக்கு போய் விடும் என்றார்.

அவர் கூறும்போதே சத்தாவின் மனத்திரையில் “பீஸ்ட்” காரின் கதவை வேலையாள் திறந்து விட மிடுக்காக தான் இறங்கும் காட்சி ஓடியது. ஹார்வார்டில் மேலே படிக்க குறைந்தது 85,000 டாலர் செலவாகும் என்றதும் சத்யாவிற்கு சற்று யோசனையாக இருந்தது. தன் பெயரில் இந்தியாவிலேயே கடன் எடுத்து விடலாம் என முடிவு செய்தார். என்னதான் படிக்கும் காலத்தில் பகுதி நேர வேலைக்குச் சென்றாலும் அவ்வளவு பெரிய தொகையை தன் பெயரில் கடனாக பெற்று எப்படி திருப்பி அடைப்பது என்று அம்மாவிடம் புலம்பினார். அப்பாவிடமிருந்து அடுத்த நாளே போன் வந்தது. என்னடா புதுசா காசு பணமெல்லாம் பார்க்கிறாய்? ஒரு டிகிரி படித்ததுமே கொம்பு முளைத்துவிட்டதோ? கடனை நான் அடைக்கிறேன். ஒழுங்கா படிக்கும் வேலையை மட்டும் பார்” என்று செல்லமாக கடிந்தார். ஆனால் ஒரு என்ஆர்ஐ வாங்கிய கடனை அவருடைய நெருங்கிய சொந்தங்கள் அடைக்க முடியுமா? அவ்வாறு அடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்று வக்கீல் மூளை யோசிக்கத் துவங்கியது. வீடு முழுவதும் அடுக்கி வைத்திருந்த குண்டு குண்டு புத்தகங்களில் ஃபெமா (FEMA) வை எடுத்தார். 
ஒரு என்ஆர்ஐ இந்தியாவில் வாங்கிய கடனை இந்தியாவில்தான் அடைக்க முடியும். தன் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பியோ அல்லது தன் என் ஆர் ஓ கணக்கிலிருந்து நேரடியாகவோ மட்டுமே கடனை அடைக்க முடியும். அதோடு மட்டுமின்றி ஃபெமா விதிகளின்படி ஒரு என்ஆர்ஐ வாங்கிய கடனை அவருடைய இந்திய வாழ் நெருங்கிய சொந்தங்கள் அடைக்க முடியும். அவ்வாறு செய்வதற்கு முதலில் அங்கீகரிக்கப்பட்ட டீலர் வங்கி யார் கடனை அடைக்கப் போகின்றாரோ அவருடைய பெயரை கேரண்டர் (Guarantor)ஆக பதிவு செய்ய வேண்டும். கடனை கேரண்டார் அவருடைய வங்கிக்கணக்கிலிருந்தே திருப்பி செலுத்த முடியும்.

இங்கே நெருங்கிய சொந்தங்கள் என்பதில் கீழ்கண்டவர்கள் மட்டுமே அடங்குவர்.

 •    ஒரே இந்துக் கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர்
 •    கணவன் மற்றும் மனைவி
 •    பெற்றோர்
 •    பிள்ளைகள் 
 •    மருமகன் மற்றும் மருமகள்
 •    சகோதர சதோதரியர் மற்றும் அவர்களுடைய துணைவியர் 
 •    தாத்தா மற்றும் பாட்டி
 •    பேரன் மற்றும் பேத்தி 

ஒரு என்ஆர்ஐ இந்தியாவில் வாங்கிய கடனை இந்திய வாழ் நபர் அடைக்க மற்றொரு வழி, என்ஆர்ஐ இந்தியாவில் வைத்திருக்கும் என்ஆர்ஓ கணக்கை உபயோகிக்கும் உரிமையை தன் நெருங்கிய சொந்தங்களுக்கு அளிக்க முடியும். அதற்கான “மான்டேட்” விண்ணப்பத்தை வங்கியில் கொடுத்தால் போதுமானது. அவ்வாறு செய்தால் அந்நபர் என்ஆர்ஓ வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கவோ செலுத்தவோ முடியும்.

இதனை தெரிந்துகொண்ட சத்யா மன நிம்மதியுடன் ஹார்வார்டு பல்கலைகழகத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய  துவங்கினார். விண்ணப்பத்தை முடிக்கவே ஒரு நாள் முழுவதும் எடுத்தது. ஆனால் தன் வாழ்வை மாற்றப் போகும் முக்கியமான அடியை எடுத்து வைக்கும் ஆவலும் உற்சாகமும் நிறைந்திருந்ததால் நேரம் கடந்ததே தெரியாமல் தன் எதிர்காலத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

( இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். )      

No comments:

Post a Comment